S R நாதன் அன்பளிப்பாக வழங்கியது
சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள S R நாதன், இந்தியச் சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்க முறையில் பங்களித்திருக்கிறார். சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக 1999 முதல் 2011 வரை சேவையாற்றிய திரு நாதன், இந்தியச் சமூகத்தின் நலனை மேம்படுத்தவும் சமூகத்தை முன்னேற்றவும் முக்கிய பங்காற்றினார். கல்வி வாய்ப்புகள், கலாசாரப் பாதுகாப்பு, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்த்த முனைப்புகளுக்கு அவர் ஆதரவளித்தார். மதிப்பிற்குரிய தலைவராக, ஒற்றுமையும் பன்மயமும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். பல கலாசார இயல்பை ஏற்று, இந்தியச் சமூகத்தின் வளமான மரபுடைமையைப் போற்றிப்பேணும் சமுதாயத்தை உருவாக்க அவர் அரும்பங்காற்றினார்.
திரு நாதன் அதிபராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இங்கு கலைப்பொருளாகக் காட்சியளிக்கிறது.
roots.gov.sg செல்அக்கால சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையில் சோடா புட்டிகள் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். ஃபிரம்ரோஸ் வர்த்தகப் பெயரிலான புட்டிகள், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தொழிலறிவுமிக்கவர்களின் கதையை விவரிக்கின்றன. ஃபிரோஸ்ஷா மனிக்ஜி ஃபிரம்ரோஸ் (P M Framroz) என்பவர் 1904ஆம் ஆண்டு சிசில் ஸ்திரீட்டில் ஃபிரம்ரோஸ் ஏரேட்டட் வாட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் 27 வயதில் பம்பாயிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து நிறுவனத்தை அமைத்தார்.
சிங்கப்பூரிலிருந்த ஆரம்பகாலத்து காற்றூட்டிய நீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஃபிரம்ரோஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் சோடா பானங்களும் மற்றவகை பானங்களும் தயாரித்தது. இதன் ஆரஞ்சு சுவைசேர்த்த பானங்கள், கலிஃபோர்னியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. இந்நிறுவனம் 1974ல் கலைக்கப்பட்டது.
இது முல்தான் வட்டாரத்தைச் சேர்ந்த நேர்த்தியான பள்ளிவாசல் முகப்பு. இதன் மத்திய பகுதி முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் இருமருங்கிலும் வளைவான இரு சிறிய நுழைவாயில்கள் உள்ளன. முல்தான் வட்டாரத்தில் நடப்பிலிருந்த காஷிகாரி (கல்பதிப்புப் பணி) பணியை நினைவில் கொள்ளச்செய்யும் எடுத்துக்காட்டு இது. வெண்ணிற வழுக்கலமைப்பில் மெருகிட்ட மென்வெள்ளி, நீலப்பச்சை நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த முகப்பு, பாரசீகத் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. பிரபஞ்சத்தில் ஒருமை, பரிசுத்தம், சமத்துவம் ஆகிய சூஃபி இஸ்லாமியக் கோட்பாடுகளை மேம்படுத்தும் முக்கிய அடையாளக்குறிகளாகவும் இந்த நிறங்கள் கருதப்படுகின்றன. இந்த அலங்கரிப்பு, 18ஆம் நூற்றாண்டு முகலாய பாணியின் அடிப்படையிலானது. முல்தான் நகரின் வாயிலாக மேற்கு ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையில் நடந்த வணிகத்தின் முக்கிய பங்கையும் இந்தக் கலைப்பொருள் காட்டுகிறது.
தெற்காசிய முஸ்லிம்களுடனான சமயத்தொடர்பு தவிர, தென்கிழக்காசிய வட்டாரத்துடனான இஸ்லாமிய வணிகத் தொடர்புகளின் சின்னமாகவும் இந்தக் கலைப்பொருள் விளங்குகிறது. ஏமனின் ஹத்ராமத், பாரசீக, அரபு நாடுகளின் வணிகத் துறைமுகங்கள் வழியாக வணிகப் பொருட்களுடன் சென்ற கப்பல்களில் சமயப் பற்றாளர்களும் பயணித்தனர். அவர்கள் தெற்காசியாவில் சற்றுகாலம் தங்கியபின், இந்தப் பாதை வழியாக மலாக்காவுக்கும் அச்சேவுக்கும் கப்பலில் பயணித்து, தென்கிழக்காசியாவுக்கு இஸ்லாத்தைக் கொண்டு சென்றனர்.
சல்மா மொயிஸ் அன்பளிப்பாக வழங்கியது
அப்பாஸ்பாய் முஹமதலிக்குச் சொந்தமான இந்தக் கடவுச்சீட்டு, இந்தியாவிலிருந்து நீரிணை குடியேற்றங்களில் நல்லதொரு வாழ்க்கை தேடிவந்த குடியேறிகளின் கதையை விவரிக்கிறது.
சிங்கப்பூரின் தாவூதி பொஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த அப்பாஸ்பாய் முஹமதலி, ஏ. முகமது அலி அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர். மலாக்கா ஸ்திரீட்டில் அமைந்திருந்த இந்நிறுவனம், இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்தக் கடவுச்சீட்டை நன்கொடையாக வழங்கியவர் தனது மாமனாரின் வாழ்க்கைப் பயணத்தை நினைவூட்டும் அடையாளச் சின்னமாக இதனைக் கருதுகிறார்.
இந்த அரிய தென்னிந்திய வெண்கல முகக்கவசம், கீர்த்திமுகனை (மகிமை முகம்) பிரதிநிதிக்கிறது. தெற்காசிய, தென்கிழக்காசிய இந்து-பௌத்த கோயில்களின் கட்டடக்கலையில் இடம்பெறும் பிரபலமான சின்னம் இது. பிதுங்கிய கண்கள், அகன்ற வாய், இரு கடல்நாகத் தலைகளாகப் பிளந்திருக்கும் நாக்கு ஆகியவற்றுடன் அச்சுறுத்தும் வடிவிலுள்ளது கீர்த்திமுகன். தீய சக்திகளை விரட்டியடிக்கும் தெய்வீகச் சக்தியின் அடையாளமாக கீர்த்திமுகன் பாதுகாப்புச் சின்னமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட காலனித்துவ ஆட்சிக்கு முந்திய காலகட்டத்தின் தொல்பொருள் ஆதாரங்களிலும் கீர்த்திமுகன் வடிவம் இடம்பெற்றுள்ளது. கீர்த்திமுகனின் தலை வடிவம் கொண்ட தங்கக் காப்பு ஒன்று புக்கிட் லரங்கானில் (ஃபோர்ட் கேனிங் மலை) 1926ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காப்பு பொது வருடத்தின் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது ஜாவானில் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும், அந்தக் காப்பின் வடிவமும் தோற்றமும் வெகு நுட்பமாக இருப்பதால், இந்தியாவில் செய்யப்பட்டதாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தக் கலைப்பொருள், தெற்காசியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான கலைப் பரிமாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறது.
ராஜம் சாரங்கபாணி அன்பளிப்பாக வழங்கியது
கோ சாரங்கபாணி அவர்கள் 1924ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றிய அவர், சுயமரியாதை இயக்கத்தை சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார். அதோடு, அந்த இயக்கத்தின் குடியரசு சஞ்சிகையை பிரிட்டிஷ் மலாயாவில் விநியோகம் செய்யும் முகவராகவும் பொறுப்பேற்றார். பின்னர், பெரியாரின் சிங்கப்பூர், மலாயா வருகைகளுக்கு ஏற்பாடு செய்யவும் அவர் உதவினார்.
எழுத்தாளரான அவர், பல்வேறு பதிப்புகளையும் வெளியிட்டார். 1929ல், முன்னேற்றம் எனும் தமிழ் சஞ்சிகையைத் தொடங்கினார். 1935ல், தமிழ் முரசு செய்தித்தாளுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டார். தனது எழுத்துகளின்மூலம் தமிழ்ச் சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பினார். தமிழர்கள் சிங்கப்பூரைத் தங்களது இல்லமாக்கிக்கொள்ள ஊக்கம் கொடுத்தார். அவர்கள் குடியுரிமை பெற உதவி செய்தார். சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கும் போராடினார்.
சாரங்கபாணி அவர்களுக்கு 1957ல் வழங்கப்பட்ட சிங்கப்பூர் குடியுரிமைக்கான பதிவுச் சான்றிதழ் இங்கு கலைப்பொருளாக இடம்பெற்றுள்ளது.
roots.gov.sg செல்டாக்டர் மா ஸ்வான் ஹூ இரவலாகக் கொடுத்தது
நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் பாலாஜி சதாசிவன் பயன்படுத்திய மருத்துவ மேலங்கி இது. அவர் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றிருந்தார். அரசியலில் சேவையாற்ற 2001ஆம் ஆண்டு மருத்துவப் பணியை அவர் கைவிட்டார். சுற்றுப்புற அமைச்சு, சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, வெளியுறவு அமைச்சு, தகவல், தொடர்பு, கலை அமைச்சு ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை அவர் ஏற்றிருந்தார். டாக்டர் பாலாஜி சதாசிவன் 2006 முதல் 2010 வரை வெளியுறவு அமைச்சின் மூத்த துணை அமைச்சராக இருந்தார். 2007ஆம் ஆண்டு, உலகச் சுகாதார நிறுவனத்தின் நிர்வாகச் சபை தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்தியச் சமூகத்திற்கு அவரின் பங்களிப்பு அளப்பரியது. சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் (சிண்டா) சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறநிதிக்கும் அவர் தலைவராகச் சேவையாற்றினார். இந்திய மரபுடைமை நிலையம் ஒன்றை அமைக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கான வழிகாட்டிக் குழுவுக்கும் அவர் தலைவராகப் பொறுப்பாற்றினார்.
கேரளாவின் கட்டடக்கலை கோயில் கட்டடக்கலையின் பரிணாமத்தைப் பெரிதும் ஒத்திருந்தது. அதோடு, மனுஷ்யாலயா சந்திரிகா, வாஸ்து வித்யா போன்ற நூல்களும் கட்டடக்கலை நடைமுறைக்கு வழிகாட்டிகளாக இருந்தன. எனவே, கேரளாவின் பல்வேறு இனப் பிரிவுகள், சமூகப் பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப வீடுகள் நிலையானதொரு வடிவில் கட்டப்பட்டன. பாரம்பரிய தச்சர்கள் இன்றுவரை வெவ்வேறு கூறுகளின் விகிதங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
முக்கோணக்கூம்பு வடிவக் கூரைகளுடன் வீட்டின் உள்ளே சூரிய ஒளியும் காற்றும் வீசும். அதே சமயத்தில் அது தற்காப்புக்கும் பயன்படும். இதுபோன்ற கூரைகளை கேரளாவின் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவக் கட்டடக்கலைகளில் காணலாம். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபபுரம் மாளிகையின் குறிப்பிடத்தக்க அம்சமாகவும் இந்தக் கூரை திகழ்கிறது.
போர்ச்சுகீசியர்கள் ஆப்ரிக்கா, இலங்கை, கோவா, மக்காவ், ஜப்பான், பிரேசில் வட்டாரங்களைக் கைப்பற்றியபோது, அந்த வட்டாரங்களில் கிறிஸ்துவக் கலை அறிமுகமானது.
அதற்கான குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக கிறிஸ்துவ தெய்வங்களின் நுட்பமான தந்தச் சிலைகளைக் கருதலாம். அந்தச் சிலைகள் போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டுமன்றி, போர்ச்சுகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிய வட்டாரங்களிலும் பிரபலமடைந்தன. குறிப்பாக, கிறிஸ்துவ உருவங்களின் தந்தச் சிலைகளின் தயாரிப்புக்கு கோவா பெயர்ப்பெற்று விளங்கியது. ஆக அதிகமாகச் சிலைகளாகச் சித்தரிக்கப்பட்டவர்களில் ஏசநாதர், மரியா, புனிதர்கள் உள்ளடங்கினர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆசியாவில் இதுபோன்ற சிலைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த இந்தோனீசிய-போர்ச்சுகீசிய பாணிக்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு அமலோற்பவ அன்னை என்றும் அறியப்படும் மடோனாவின் தந்தச் சிலை. மடோனாவின் கூந்தலும் ஆடையின் ஓரங்களும் நேர்த்தியான முலாம் அலங்கரிப்புடன் பெருமைக்குரிய தோற்றத்தை வெளிக்காட்டுகின்றன. அரமைந்தர்களின் மேகக்கூட்டத்தின்மீது, வலது முழங்கால் மடங்கியபடி, பிரார்த்தனை தோரணையில் உள்ளங்கைகள் கூப்பியபடி மடோனா நிற்கிறார். சாந்தமான வெளிர்நிறக் கண்கள், வளைந்த மூக்கு, அகலமான முகம், நீளமான பொன்னிறக் கூந்தல் அனைத்தும் ஐரோப்பிய பாணியில் இருந்தாலும், சிலைக்குத் தங்கக் காதணிகள் அணிவிக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவில் தெய்வச் சிலைகளை அலங்கரிக்கும் வழக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
roots.gov.sg செல்