அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அரும்பொருளகம் சார்ந்த கற்றல்

அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்திற்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?

உங்கள் பள்ளியின் இந்திய மரபுடைமை நிலைய வருகைக்குப் பதிவு செய்ய, தயவுசெய்து BookMuseums@SG தளத்தைப் பயன்படுத்துங்கள்.


பள்ளிகளின் சார்பில் இந்திய மரபுடைமை நிலைய அலுவலர்கள் பதிவுசெய்ய முடியுமா?

மன்னிக்கவும், எங்களால் பள்ளிகளின் சார்பில் பதிவுசெய்ய முடியாது. இந்தத் தளத்தைக் கல்வியாளர்கள் மட்டுமே அணுக முடியும். தளத்தில் உள்நுழைய, உங்களது சிங்பாஸ் விவரங்களை தயாராக வைத்திருங்கள். இத்தளத்தில் உங்களது கல்வி அமைச்சு மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியம் (@moe.gov.sg மின்னஞ்சல் முகவரி).

உங்களுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், NHB_Digital_Services@nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்கள் குழுவினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.


உங்கள் நிலையத்திற்கு வருகையளிக்க, எத்தனை நாட்களுக்கு முன்னதாக நான் பதிவு செய்யவேண்டும்?

கல்வியாளர்கள் வருகைதர விரும்பும் தேதிக்குக் குறைந்தது 42 நாட்களுக்கு அல்லது 6 வாரங்களுக்கு முன்னதாகப் பதிவு செய்யவேண்டும்


நான் குறிப்பிட்ட ஒரு தேதிக்குப் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால், இணையவாசல் பிழைத் தகவலைக் காட்டுகிறது. இது எதனால்?

இதற்கு இரண்டு உத்தேசக் காரணங்கள் இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த தேதியில் பதிவுக்கு இடமில்லாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் உள்ளிட்ட மாணவர் எண்ணிக்கை அரும்பொருளகத்தின் வரம்புக்குமேல் இருக்கலாம்.


எங்கள் பள்ளியின் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அரும்பொருளகம் சார்ந்த கற்றலுக்குப் பதிலாக வழிகாட்டிச் சுற்றுலாவுக்கு அல்லது சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் வருகைக்கு நாங்கள் பதிவு செய்யலாமா?

இல்லை. கல்வியாளர்கள் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அரும்பொருளகம் சார்ந்த கற்றலுக்குப் பதிவு செய்யவேண்டும்.


இந்தக் கற்றல் திட்டத்திற்கு அதிகபட்சம் எத்தனை மாணவர்களை அழைத்து வரலாம்?

ஒவ்வொரு நேரப் பிரிவுக்கும் 100 மாணவர்கள் வரை அழைத்து வரலாம். கல்வியாளர்கள் முடிந்தவரை ஒவ்வொரு நேரப் பிரிவுக்கும் அதிகபட்ச மாணவர்களை அழைத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பள்ளிகள் 80 மாணவர்கள் கொண்ட 2 வகுப்புகளுக்கு ஒரு நேரப் பிரிவைப் பதிவு செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் ஒரு வகுப்புக்கு ஒரு நேரப் பிரிவைப் பதிவு செய்வதை கல்வியாளர்கள் முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.

ஒரு நேரப் பிரிவுக்கு இரண்டு பள்ளிகள் பதிவு செய்யலாம். உதாரணத்துக்கு, உங்கள் பள்ளியின் தொடக்கநிலை 5ஆம் வகுப்பில் மிகவும் குறைவான மாணவர்கள் இருந்தால், மற்றோரு பள்ளி அதே நேரப் பிரிவுக்கு பதிவு செய்யலாம். ஆனால் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் கலந்துறவாடல் இருக்காது.


ஒவ்வொரு கற்றல் அங்கத்திற்கும் எத்தனை கல்வியாளர்கள்/தொண்டூழியப் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவார்கள்?

15 மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பெரியவர் உடனிருப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.


அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்தின் நேரப் பிரிவுகள் என்ன? நாங்கள் எத்தனை மணிக்கு வரவேண்டும்?

2023ன் நேரப் பிரிவுகள்:

காலையில்: காலை 9 மணி – காலை 11 மணி
பிற்பகலில்: நண்பகல் 12 மணி – பிற்பகல் 2 மணி
பிற்பகலில்: பிற்பகல் 2.30 மணி – மாலை 4.30 மணி

மேற்காணும் நேரங்கள் தொடங்குவதற்குக் குறைந்தது 15 - 20 நிமிடம் முன்னதாகவே அனைவரும் வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறித்த நேரத்தில் கற்றல் திட்டத்தைத் தொடங்கி முடிப்பதை இது உறுதி செய்யும்.


எங்களது நேர ஏற்பாட்டுக்கு ஏற்ப உங்களது நேரப் பிரிவுகளில் மாற்றம் செய்ய முடியுமா?

நேரப் பிரிவுகள் நிலையானவை என்பதால் அவற்றில் மாற்றம் செய்ய இயலாது. ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் அதிகபட்ச நேரப் பிரிவுகளை ஒதுக்குவதற்கு இந்த ஏற்பாடு துணை புரிகிறது.


இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்படும் கற்றல் திட்டம் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும்?

கற்றல் திட்டம் சுமார் 2 மணிநேரம் நீடிக்கும்.


மாணவர்கள் உங்கள் நிலையத்தில் சிறு இடைவேளை எடுத்துக்கொண்டு, சிற்றுண்டி சாப்பிடலாமா?

ஆம், கற்றல் திட்டம் தொடங்குவதற்கு முன்பு அல்லது அதன் பிறகு மாணவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள வளாகத்தில் சிற்றுண்டி சாப்பிடலாம். சிற்றுண்டி சாப்பிட உங்களுக்குரிய நேரப் பிரிவுக்கு 20 - 30 நிமிடம் முன்னதாகவே மாணவர்கள் நிலையத்தை வந்தடைவதைப் பள்ளிகள் உறுதி செய்யவேண்டும். சிற்றுண்டி சாப்பிட நேரம் வகுக்க கற்றல் திட்டத்தை சுருக்குவதை நாங்கள் பரிந்துரைக்கமாட்டோம்.


அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்தில் பங்குபெற ஒரு மாணவருக்குக் கட்டணம் எவ்வளவு?

எங்கள் நிலையத்திற்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கையின்படி, பள்ளிகளுக்கு ஒரு மாணவருக்கு $8 கட்டணம் விதிக்கப்படும். வருகையளித்த தேதியிலிருந்து உங்கள் பள்ளியின் 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் வருகைதந்த பிறகே கட்டணச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.


அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்திற்கு வழிகாட்டிகளை வழங்குவீர்களா?

ஆம். மாணவர்கள் 15 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, எங்களது அரும்பொருளக் கல்வி வழிகாட்டிகளில் ஒருவருடன் இணைக்கப்படுவார்கள்.


மாணவர்களுக்குப் பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்படுமா?

ஆம், மாணவர்களின் கற்றல் பயணத்திற்குத் துணைபுரிய கையேடு ஒன்றை நாங்கள் வழங்குவோம்.


மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்படுமா?

இல்லை. மாணவர்கள் தங்களது சொந்த எழுதுபொருட்களை எடுத்து வரவேண்டும். எங்கள் காட்சிக்கூடங்களில் பென்சில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பேனாக்கள், அழிப்பான்கள் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.


மாணவர்கள் தங்களது உடமைகளை ஓர் அறையில் வைத்துச் செல்ல முடியுமா?

மாணவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள வளாகத்தில் தங்களது பைகளையும் தண்ணீர் போத்தல்களையும் வைத்துச் செல்லலாம். ஆனால், பணப்பை, கைப்பேசி போன்ற விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் கையோடு எடுத்துச் செல்லவேண்டும்.


அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்தில் பங்குபெறும் மாணவர்கள் உங்கள் நிலையத்திற்கு வருவதற்குப் போக்குவரத்து ஏற்பாடு செய்து தரப்படுமா?

இல்லை, பள்ளிகள் சொந்தமாகப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.


வாகனத்திலிருந்து இறங்கும்/ஏறும் இடத்திலிருந்து இந்திய மரபுடைமை நிலையம் வரை கூரையுள்ள நடைபாதை இருக்கிறதா?

இல்லை. ஆனால், வாகனத்திலிருந்து இறங்கும்/ஏறும் இடத்திலிருந்து ஒரு நிமிடம் நடக்கும் தூரத்தில் எங்கள் நிலையம் அமைந்துள்ளது. மழை பெய்தால் பயன்படுத்திக்கொள்ள குடைகளை எடுத்துவருவது நல்லது.


எங்கள் மாணவர்கள் எங்கிருந்து பேருந்தில் இறங்கவேண்டும் / ஏறவேண்டும்?

தயவுசெய்து கிளைவ் ஸ்திரீட் வீதியைப் பயன்படுத்துங்கள்.


தொடக்கநிலை 4 அல்லது 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாங்கள் வழிகாட்டிச் சுற்றுலாவுக்குப் பதிவு செய்யலாமா?

ஆம், நீங்கள் செய்யலாம். ஆயினும், அதற்குப் பதிலாகப் பின்வரும் அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டங்களுக்குப் பதிவு செய்ய ஊக்குவிக்கிறோம்:

i. தொடக்கநிலை 4ஆம் வகுப்பு மாணவர்கள்:
கிரேத்தா ஆயர் மரபுடைமை காட்சிக்கூடத்தில் மற்றும்/அல்லது கேலாங் செராய் மரபுடைமை காட்சிக்கூடத்தில் அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டக்களுக்குப் பதிவு செய்யலாம்.

ii. தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்கள்:
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டக்களுக்குப் பதிவு செய்யலாம்.

இந்திய மரபுடைமை நிலையத்தின் அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்திற்குக் குறிப்பிட்ட நேரப் பிரிவுகளே உள்ளன என்பதையும், தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்திற்கு நாங்கள் செய்திருந்த பதிவை எவ்வாறு ரத்து செய்வது?

பதிவை ரத்து செய்வதற்கு, கல்வியாளர்கள் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

பதிவு செய்துவிட்டு கற்றல் திட்டத்திற்கு வராவிட்டாலும், கற்றல் திட்டம் தொடங்கும் தேதிக்கு முந்திய 5 நாட்களுக்குள் ரத்து செய்தாலும், 20 மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவுக்கும் பள்ளிக்கு $30 ரத்துக் கட்டணம் விதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பள்ளி வருகைகள்

என் பள்ளிக்காக இந்திய மரபுடைமை நிலைய வருகைக்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?

உங்கள் வருகைக்குப் பதிவு செய்ய, தயவுசெய்து BookMuseums@SG தளத்தைப் பயன்படுத்துங்கள்.


பள்ளிகளின் சார்பில் இந்திய மரபுடைமை நிலைய அலுவலர்கள் பதிவுசெய்ய முடியுமா?

மன்னிக்கவும், எங்களால் பள்ளிகளின் சார்பில் பதிவுசெய்ய முடியாது. இந்தத் தளத்தைக் கல்வியாளர்கள் மட்டுமே அணுக முடியும். தளத்தில் உள்நுழைய, உங்களது சிங்பாஸ் விவரங்களை தயாராக வைத்திருங்கள். இத்தளத்தில் உங்களது கல்வி அமைச்சு மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியம் (@moe.gov.sg மின்னஞ்சல் முகவரி).

கல்வி அமைச்சின் கல்வி நிலையங்களைச் சேர்ந்திராத கல்வியாளர்கள், உங்களது வேலையிட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.

உள்நுழைவதற்கு BookMuseums தளத்தில் மறக்காமல் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், NHB_Digital_Services@nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்கள் குழுவினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.


உங்கள் நிலையத்திற்கு வருகையளிக்க, எத்தனை நாட்களுக்கு முன்னதாக நான் பதிவு செய்யவேண்டும்?

  • வழிகாட்டிச் சுற்றுலா தேவைப்படும் பள்ளிகளுக்கு, கல்வியாளர்கள் வருகையளிப்புத் தேதிக்குக் குறைந்தது 42 நாட்களுக்கு அல்லது 6 வாரங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யவேண்டும்.
  • சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் வருகைகளுக்கு, கல்வியாளர்கள் வருகையளிப்புத் தேதிக்குக் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யவேண்டும்.

வழிகாட்டிச் சுற்றுலாவுக்கு அல்லது சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் வருகைக்கு ஒட்டுமொத்த பள்ளியும் ஒன்றாக வருவது சாத்தியப்படுமா?

இட நெருக்கடியாலும், ஒரே சமயத்தில் மற்ற பள்ளித் திட்டங்கள் நடைபெறுவதாலும், எந்தவொரு நேரத்திலும் 40 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பை மட்டுமே நாங்கள் அனுமதிப்போம். நீங்கள் வெவ்வேறு நேரத்தில் அல்லது நாளில் வருகை அளிக்கலாம்.


இந்திய மரபுடைமை நிலையத்திற்கு எந்த நேரத்தில் வருகை தரலாம்?

நீங்கள் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் வருகை தரலாம்.

திங்கட்கிழமைகளில் நிலையம் மூடப்பட்டிருக்கும்.


நான் வழிகாட்டிச் சுற்றுலாவுக்குக் கோரிக்கை செய்யலாமா?

ஆம், நீங்கள் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வருகைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால் வழிகாட்டிச் சுற்றுலாவுக்குக் கோரிக்கை செய்யலாம்.

உங்களது மாணவர்களுக்கு எங்களது காட்சிக்கூடங்களைச் சுற்றிக்காட்ட வழிகாட்டிகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருவோம். ஆனால், இது வழிகாட்டிகள் இருப்பதைப் பொறுத்தது. எங்களால் வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலாவிட்டால், உங்கள் வருகை சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் வருகையாகத் தானாகவே மாறிவிடும். பொதுவாக, ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களைச் சிறிய குழுக்களாகப் பிரித்து வழிகாட்டுவதற்கு 3 வழிகாட்டிகளை வழங்க நாங்கள் முயற்சி செய்வோம்.

இல்லை, நீங்கள் பாலர் பள்ளி மாணவர்களுக்காக வழிகாட்டிச் சுற்றுலாவுக்குக் கோரிக்கை செய்வதாக இருந்தால், எங்களிடம் அதற்குரிய திட்டம் எதுவும் இல்லை. நீங்கள் அவர்களைச் சொந்தமாகச் சுற்றிப்பார்க்க அழைத்து வரலாம்.


இந்திய மரபுடைமை நிலையம் தமிழில் வழிகாட்டிச் சுற்றுலா வழங்குகிறதா?

ஆம், வழங்குகிறோம். இதற்கு BookMuseums@SG தளத்தில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


என் மாணவர்களும் நானும் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு வருகை அளிக்கவிருக்கிறோம். அப்போது இந்திய மரபுடைமை நிலையத்திற்கும் வருகை அளிக்க விரும்புகிறோம். நாங்கள் எத்தனை மணிக்கு வருகை அளிக்கலாம்?

இது, நீங்கள் வருகை அளிக்கவிருக்கும் தேதியில் மற்றவர்கள் செய்துள்ள முன்பதிவுகளைப் பொறுத்தது. நீங்கள் லிட்டில் இந்தியாவுக்கு வருகை அளிப்பதற்கு முன்னதாக பதிவு செய்வது நல்லது.


எங்கள் மாணவர்களுக்கு உங்கள் காட்சிக்கூடங்களைச் சுற்றிக்காட்ட வெளிதரப்பு வழிகாட்டிக்கு என் பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய வி‌ஷயங்கள் ஏதாவது உள்ளதா?

ஒரு வகுப்பில் உள்ள 40 மாணவர்களைச் சிறிய குழுக்களாகப் பிரித்து, காட்சிக்கூடங்களைச் சுற்றிக்காட்டுவதற்குக் குறைந்தது 3 வழிகாட்டிகள் அமர்த்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வகுப்பில் உள்ள 40 மாணவர்கள் ஒரு காட்சிப்பேழையைச் சுற்றிக் கூட்டமாக நிற்பது மற்ற வருகையாளர்களுக்கு இடையூறாக இருக்கும்.

குழுப் பதிவு

என் அமைப்புக்காக இந்திய மரபுடைமை நிலைய வருகைக்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?

தயவுசெய்து இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்வதன்மூலம் உங்கள் வருகைக்குப் பதிவு செய்யுங்கள்.


உங்கள் நிலையத்திற்கு வருகையளிக்க, எத்தனை நாட்களுக்கு முன்னதாக நான் பதிவு செய்யவேண்டும்?

நீங்கள் வருகைதர விரும்பும் தேதிக்குக் குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாகப் படிவத்தைச் சமர்ப்பித்து பதிவு செய்யவேண்டும்.


இந்திய மரபுடைமை நிலையத்திற்கு எந்த நேரத்தில் வருகை தரலாம்?

நீங்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் வருகை தரலாம்.

திங்கட்கிழமைகளில் நிலையம் மூடப்பட்டிருக்கும்.


நான் தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலாவுக்குக் கோரிக்கை செய்யலாமா?

ஆம், உங்கள் நண்பர்களுக்கு / சக ஊழியர்களுக்குக் காட்சிக்கூடங்களைச் சுற்றிக்காட்ட நாங்கள் வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்துதர முடியும். ஆனால், இது வழிகாட்டிகள் கிடைப்பதைப் பொறுத்தது. பொதுவாக, அதிகபட்சம் 15 பேர் கொண்ட குழுவுக்கு ஒரு வழிகாட்டியை வழங்க நாங்கள் முயற்சி செய்வோம்.


தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலா எவ்வளவு நேரம் நீடிக்கும்?

ஒவ்வொரு சுற்றுலாவும் சுமார் 60 நிமிடம் நீடிக்கும்.


தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலாவுக்குக் கட்டணம் உண்டா?

ஆம், நிறுவனக் குழுக்கள், லாப நோக்கற்ற அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுக்கான தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலாக்களுக்கு ஒரு வழிகாட்டிக்கு $150 கட்டணம் உண்டு. சமூகநல அமைப்புகள் போன்றவற்றுக்கு சுற்றுலா இலவசம்.


தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலாவுக்கு நான் எப்படி பணம் கட்டுவது?

உங்கள் வருகைக்கு முன்பாக, முதல் மாடியில் அமைந்துள்ள வருகையாளர் சேவை முகப்பில் நுழைவுக் கட்டணத்தையும் வழிகாட்டிச் சுற்றுலா கட்டணத்தையும் செலுத்தவேண்டும். இரு கட்டணங்களையும் பின்வரும் வழிகளில் செலுத்தலாம்: ரொக்கம் / நெட்ஸ் / விசா / மாஸ்டர்கார்ட் / இணையவழி. வழிகாட்டிச் சுற்றுலா கட்டணத்திற்குக் காசோலைகளும் ஏற்கப்படும்.


இந்திய மரபுடைமை நிலையத்தை நான் சொந்தமாகச் சுற்றிப்பார்க்க வரலாமா?

ஆம், இந்திய மரபுடைமை நிலையத்தை நீங்கள் சொந்தமாகச் சுற்றிப்பார்க்க வரலாம். ஆனால், மறக்காமல் வருகைக்கு முன்பதிவு செய்யவேண்டும்.


இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வருகைதர நான் பேருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன். ஓட்டுநர் எங்களை எங்கே இறக்கிவிடலாம்?

நீங்கள் பேருந்துக்கு ஏற்பாடு செய்தால், உங்கள் குழுவினரை கிளைவ் ஸ்திரீட்டில் இறக்கிவிடுமாறு ஓட்டுநரிடம் தெரிவிக்கலாம். இந்த வீதியில் வாகனங்களை நிறுத்திவைக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

புகைப்படமும் காணொளியும் எடுத்தல்

உங்கள் காட்சிக்கூடங்களில் எத்தகைய ஒளியமைப்பையும் சிறப்புக் காட்சியமைப்புகளையும் அனுமதிப்பீர்கள்?

புகைப்படமோ காணொளியோ எடுப்பதற்காக எந்தவொரு படப்பிடிப்பு ஏற்பாடுகளையும் அமைப்பதற்குமுன் எங்களிடம் முதலில் தெரிவிக்கவேண்டும்.

நாங்கள் அனுமதிக்காதவை:

  • ஒளிவீச்சுடன் புகைப்படம் எடுத்தல், குறிவிளக்குகள், கனமான ஒளியமைப்புப் பொருத்துமானங்கள். காட்சிப்பொருட்களை நீண்டகாலத்திற்குப் பாதுகாத்து வைத்திருப்பது இதன் நோக்கம்;
  • காட்சிக்கூடங்களின் உட்கூரைகளிலும் சுவர்களிலும் கூடுதல் விளக்குகள் பொருத்துதல். இதனால் காட்சிக்கூடங்களின் ஈரத்தன்மை பாதிப்படைந்து, காட்சிப்பொருட்கள் சேதமடையக்கூடும்;
  • புகை மற்றும் புகைமூட்டச் சாதனங்கள். இவை காட்சிக்கூடங்களின் வெப்பநிலையைப் பாதிக்கும்;
  • பெரிய காட்சியமைப்புப் பொருட்கள் மற்றும் முக்காலிச் சட்டங்கள். இவை வருகையாளர்களின் பார்வையை மறைக்கக்கூடும்.

உங்கள் நிலையத்தில் புகைப்படம் / காணொளி எடுக்கும்போது முக ஒப்பனை செய்வதற்கும் உடை மாற்றுவதற்கும் நாங்கள் பயன்படுத்தக்கூடிய இடம் ஏதாவது இருக்கிறதா?

தயவுசெய்து இதற்குக் கழிவறையைப் பயன்படுத்துங்கள். இந்திய மரபுடைமை நிலையத்தில் உள்ள பொது இடங்களில் சிகையலங்கார, முக ஒப்பனை, உடையலங்காரக் கூடங்கள் எதையும் அமைக்கக்கூடாது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!


படப்பிடிப்பின்போது காட்சிக்கூடங்களில் உணவும் பானங்களும் உட்கொள்ளலாமா?

நீங்கள் சாப்பிட அல்லது குடிக்க விரும்பினால், காட்சிக்கூடங்களிலிருந்து வெளியே செல்லவேண்டும். காட்சிக்கூடங்களில் எதையும் உட்கொள்ளக்கூடாது.

நடமாடும் கண்காட்சி

நடமாடும் கண்காட்சிக்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?

நடமாடும் கண்காட்சிக்குப் பதிவு செய்ய, தயவுசெய்து nhb_ihc@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


நடமாடும் கண்காட்சிக்கு எத்தனை நாட்களுக்கு முன்னதாகப் பதிவு செய்யவேண்டும்?

நடமாடும் கண்காட்சிகளுக்குக் குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாகப் பதிவு செய்வது நல்லது. பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி போன்ற விழாக்களின்போதும், இன நல்லிணக்க நாள் போன்ற சிறப்பு நாட்களிலும் அதிகமானோர் இரவல் பெறுவர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த நாட்களுக்குப் பதிவு செய்ய விரும்புவோர் குறைந்தது 6 மாதங்களுக்கு முன்னதாகப் பதிவு செய்வது நல்லது.


இதற்குக் கட்டணங்கள் உண்டா?

நடமாடும் கண்காட்சிகளுக்கு நாங்கள் கட்டணம் விதிப்பதில்லை.


இந்திய மரபுடைமை நிலையம் மேடையமைப்புப் பொருட்களை அல்லது பாரம்பரிய ஆடைகளை இரவலாகத் தருகிறதா?

இல்லை, நாங்கள் இரவல் தருவதில்லை. நீங்களே மேடையமைப்புப் பொருட்களுக்கு / பாரம்பரிய ஆடைகளுக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.


இந்திய மரபுடைமை நிலையம் மருதாணி அல்லது ரங்கோலி சேவைகளை வழங்குகிறதா?

இல்லை, இந்தச் சேவைகளை நாங்கள் வழங்குவதில்லை. நீங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ளலாம்.


இந்திய மரபுடைமை நிலையம் நடமாடும் கண்காட்சிகளை வழிநடத்த அலுவலர்களை வழங்குமா?

இல்லை. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள காட்சிப்பலகைகளில் பெரும்பாலானவை தெளிவான விளக்கங்கள் கொண்டவை. தொடக்கப்பள்ளி மாணவர்கள் உட்பட, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.


நடமாடும் கண்காட்சிகளுக்குத் துணையாக மாணவர்களுக்கான வளங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

ஆம், மாணவர்களுக்காக எங்களிடம் நிறைய வளங்கள் இருக்கின்றன! மாணவர்களுக்காக நாங்கள் தொகுத்திருக்கும் கற்றல் தொகுப்புகள், கையேடுகள், நடவடிக்கை தொகுப்புகள், கைவினைக் கலைகள், காணொளிகள் ஆகியவற்றின் பட்டியலை எங்களது கற்றல் வளங்கள் பக்கத்தில் நாங்கள் பார்வையிடலாம். நடமாடும் கண்காட்சிகளுக்கு வருகையளிக்கும் மாணவர்கள் செறிவான அனுபவம் பெற, பள்ளிகள் இந்த வளங்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம்.

வாடகைக்கு நிகழ்விடம்

நிகழ்ச்சி அறையின் கொள்ளளவு என்ன?

விரிவுரை பாணியில் இருக்கையமைப்பு: 50 பேர் உட்காரலாம்.

பயிலரங்கு பாணியில் மேசைகளும் நாற்காலிகளும் அமைப்பு: 30 பேர்


நிகழ்ச்சி அறையில் எந்த வகையான ஒலி-ஒளி சாதனங்களை வழங்குகிறீர்கள்?

மேலே மாட்டப்பட்டிருக்கும் ஒளிவீச்சுக் கருவி, ஒலிபெருக்கிகள் ஆகியவற்றுடன் மடிகணினிகளை இணைப்பதற்கான HDMI இணைப்பை நாங்கள் வழங்குகிறோம். கூடுதல் ஒலிப்பெருக்கிகளை நாங்கள் வழங்குவதில்லை.


எங்களது சொந்த ஒலிப் பெருக்கிகளை/சாதனங்களை நாங்கள் கொண்டு வரலாமா?

கூடுதல் சாதனங்களை அமைப்பதற்கு, உங்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்குக் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக நீங்கள் அனுமதி கேட்கலாம். எங்கள் நிலையத்தின் மின்கட்டமைப்பில் அளவுக்கதிக மின்பளு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நாங்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம்.


நீங்கள் வைஃபை (WiFi) இணைப்பை வழங்குவீர்களா?

ஆம், உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்ட பிறகு, நிகழ்ச்சி நடைபெறும் தேதி நெருங்கும்போது எங்களது வைஃபை உள்நுழைவு விவரங்களைத் தெரிவிப்போம்.


நிகழ்ச்சி அறையில் உணவு சாப்பிட அனுமதி உள்ளதா?

ஆம், உணவு அனுமதிக்கப்படும். உங்கள் நிகழ்ச்சிக்குக் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக, உணவு விநியோக விவரங்கள், சுத்தப்படுத்தும் ஏற்பாடுகள் ஆகியவற்றை எங்களிடம் தெரிவிக்கவேண்டும்.