லிட்டில் இந்தியாவைக் கண்டறிந்திடுங்கள்
நமது வாழும் மரபுடைமையில் திளைத்திருங்கள்
உங்களது தேடல் பயணத்தை நீட்டித்திடுங்கள்! நாங்கள் அமைந்திருக்கும் துடிப்புமிக்க லிட்டில் இந்தியா வட்டாரத்தில், சிங்கப்பூர் இந்தியக் கலாசாரத்தைப் பற்பல வழிகளில் அனுபவிக்கலாம்.
அதற்கான சில வழிகள்:
- பக்தர்களின் அன்றாட வழிபாட்டு முறையைத் தெரிந்துகொள்ள, இங்கிருக்கும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்து கோயில்களில் ஒன்றுக்கு நீங்கள் செல்லலாம்;
- லிட்டில் இந்தியா வீதிகளிலும் எங்கள் நிலையத்திலும் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல், தைப்பூசம், தீபாவளி போன்ற கலாசார, சமய விழாக்காலக் கொண்டாட்டங்களில் ஒன்றில் கலந்துகொள்ளலாம்;
- அக்கால இந்தியர்கள் மேற்கொண்ட நெடும்பயணத்தின்வழி தோன்றிய பல்வேறு வகையான இந்திய உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம்.
இத்தகைய பன்மய அனுபவங்களை வழங்கும் லிட்டில் இந்தியா, சிங்கப்பூரின் மிகவும் துடிப்புமிக்க, வண்ணமயமான வட்டாரங்களில் ஒன்றாகப் பெயர் பெற்று விளங்குகிறது. இவையெல்லாம் எப்படித் தொடங்கின?
நாம் இன்று லிட்டில் இந்தியா என்று குறிப்பிடும் வட்டாரம் இந்தியச் சமூகத்திற்காக ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மை. சூலியா ஸ்திரீட், ஹாய் ஸ்திரீட் வட்டாரங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியபோது, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இங்கு குடியேறிய மக்களில் தாமாகவே மாற்றங்கள் நிகழத் தொடங்கின.
செங்கல் சூளைகள், சுண்ணாம்புக் குழிகள், காய்கறித் தோட்டங்கள் ஆகியவற்றுடன் மாடு மேய்க்கும் நடவடிக்கைகளும் தலையெடுக்கத் தொடங்கின. தொழில்முனைப்புமிக்கத் தனிமனிதர்கள், குடிசைத் தொழில்களோடு, பலதரப்பட்ட கடைகளையும் வணிகங்களையும் தொடங்கினர். அவற்றுள் சில இன்றுவரை நீடித்து நிலைத்திருக்கின்றன.
உள்ளூர் மக்கள், சுற்றுப்பயணிகள் என அனைவரும் விரும்பும் இந்த வட்டாரம், 1989ஆம் ஆண்டு பாதுகாக்கப்படும் வட்டாரமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள பாதுகாக்கப்படும் கடைவீடுகளோடு, சுற்றுவட்டாரத்தில் கூடுதல் கடைவீடுகளும் கட்டப்பட்டன. அவற்றில் புடவை கடைகள், நகைக் கடைகள், மசாலைப்பொருள் கடைகள், மாலைகள், மிட்டாய்கள், தின்பண்டங்கள், அருங்கலைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் மற்ற கடைகள் அமைந்துள்ளன.
எங்கள் காட்சிக்கூடங்களில் லிட்டில் இந்தியாவின் வரலாற்றுத் துணுக்குகளையும் சுவாரஸ்யமான அம்சங்களையும் நீங்கள் காணலாம். லிட்டில் இந்தியாவுக்கு வருகையளித்து ஆராய்கையில், 5 கேம்பல் லேன் எனும் முகவரியில் அமைந்திருக்கும் இந்திய மரபுடைமை நிலையத்தையும் வந்து பாருங்கள். விரைவில் சந்திப்போம்!