பொங்கலின் நான்கு நாட்கள் என்னவென்று மேலும் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் விசைகளை அழுத்துங்கள்!
பொங்கலின் முதல் நாள் “போகி” என்று அழைக்கப்படும். ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பழைய பொருள்களை வீசிவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்வார்கள். திருவிழா போல வீடுகள் அலங்கரிக்கப்படும். அனைவரும் புத்தாடைகள் அணிவார்கள்.
பொங்கலின் இரண்டாவது நாள் சூரிய பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. இதுவே பொங்கலின் முக்கியமான நாள். இந்நாளில், சூரிய தேவனைப் போற்றி வணங்குவார்கள். வீட்டு வாசலில் வண்ண வண்ணக் கோலங்கள் வரைவார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் நல்ல நேரத்தில் அரிசியுடன் பால் சேர்த்து பொங்கல் சமைப்பார்கள். பானையிலிருந்து பால் பொங்கி வழியும்போது, குடும்பத்தார் அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என மகிழ்ச்சியாகக் குரல் எழுப்புவார்கள்! பொங்கல் தயாரானவுடன் சூரிய தேவனுக்குப் படைப்பார்கள். அதன் பிறகு, பொங்கலுக்காகவே தயாரித்த பல்வேறு உணவு வகைகளை அனைவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
பொங்கலின் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படும். வயலை உழுது கடினமாக உழைக்கும் மாடுகளை வணங்கிப் போற்றும் நாள் இது. இந்நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி, பலவண்ணப் பாசிமணிகளும், மலர் மாலைகளும், கிண்கிணி மணிகளும் அணிவிப்பார்கள்.
சிங்கப்பூரில், இந்தியர்களுக்குச் சொந்தமான சில பால் பண்ணைகளில் மாடுகளுக்காகச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
பொங்கலின் நான்காவது நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், சமூகத்திற்கும் பந்தத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குடும்பத்தார் அனைவரும் ஒன்றுகூடி விருந்து சாப்பிடுவார்கள். இள வயதினர் மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள். மயிலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய இந்தியக் கிராமிய நடனங்களும் இந்நாளில் அரங்கேறும்.
பொங்கல் என்றால் என்ன?
நீங்கள் கற்றுக் கொண்டவற்றை யோசித்துப் பார்த்து, நண்பர்களுடன் அல்லது ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.